இந்தியாவில் கடந்த ஆண்டு கொவிட் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந் நிதி நெருக்கடி பல ஆண்டுகால பொருளாதார சேமிப்புக்களை நீக்கியுள்ளதுடன் வேலை இழப்புகள் மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளியுள்ளதாக ஆராய்ச்சி மையம் கடந்த (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக் கொவிட் தொற்று, நடுத்தர வர்க்கத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை அல்லது ஒரு நாளைக்கு 10 முதல் 20 டொலர் வரை சம்பாதிப்பவர்களின் தொகையை சுமார் 32 மில்லியனாகச் சுருக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தொற்று நோய்க்கு முன்னராக காலப்பகுதியில் 99 மில்லியனாக இருந்த நடுத்தர வர்க்கத்தினர், தொற்று நோயின் பின்னர் மூன்றில் ஒரு பங்கு குறைந்து 66 மில்லியனாகப் பதிவாகியுள்ளனர்.
நாளொன்றுக்கு 02 டொலர் அல்லது அதற்கும் குறைவான வருமானம் பெறும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 75 மில்லியனாக உயர்ந்துள்ளதாக பியூ மையம் மதிப்பிட்டு கூறியுள்ளது.
கொவிட் 19 நிலையில், சீனாவை விட இந்தியாவில் அதிக நடுத்தர வர்க்கத்தினர் வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை மேற்கோளிட்டு பியூ ஆராய்ச்சி மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2011 – 2019 வரை கிட்டத்தட்ட 57 மில்லியன் மக்கள் நடுத்தர வருமானக் குழுவில் சேர்ந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முறையே 5.8 வீதம் மற்றும் 5.9 வீதமாக இருந்ததாக உலக வங்கி கணித்துள்ளது.
தொற்றுநோய்க்குப் பின்னர், 2021 ஜனவரியில் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் 9.6 வீதம் வீழ்ச்சியடைந்தும் சீனாவில் இரண்டு வீதம் வளர்ச்சியடைந்தும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து கொரோனா பரவல் குறைந்துள்ள போதும் சில தொழில்துறை மாநிலங்களில் இரண்டாவது அலை நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நிலைகுறித்தும் பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.