இன்று புனித வெள்ளி தினமாகும், இயேசு கிறிஸ்து எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்.
இச் சிலுவை சாவை பற்றி நாங்கள் இன்று விசேடமாக தியானிக்கின்றோம். காரணம் யேசுநாதரின் சிலுவை சாவு ஒரு இழப்பு அல்ல,
அது ஒரு புதிய பிறப்பைத் தரும், எமக்கு நம்பிக்கை தரும் ஒரு அடையாளமாக இருக்கின்றது.
இயேசு கிறிஸ்து இவ் உலகத்திற்கு வந்தது எம்மை மீட்பதற்காக, மனிதர்கள் நாங்கள் பிறக்கும் போதே சென்ம பாவத்துடன் பிறக்கின்றோம்.
அப்படி ஒரு வரையறுப்போடு பிறக்கும் மனிதரை விடுதலை செய்து அவர்களை வாழ வைப்பதற்காக எம் மீட்பர் இவ் உலகிற்கு வந்து எமது பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே அவர் ஒப்புக் கொடுத்தார்.
எமது கிறிஸ்தவ விசுவாசத்தின் படி பல்லாண்டுகளுக்கு முன்பாக யூதர்கள் மரபிலே பழைய ஏற்பாடு என்று இருந்தது.
அப்போது தலைமை குருக்கள் பலியாக காணிக்கைகளையும், விலங்குகளைக் கூட காணிக்கையாக இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தார்கள்.
இயேசு கிறிஸ்து இவ் உலகிற்கு வந்ததன் பின்னர் தன்னையே தியாகம் செய்து தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்து இறைவனிடம் எங்களுக்காக பாவ மன்னிப்பு பெற்றுத் தருகின்றார்.
அதன் வழியாக நாங்கள் இன்று சுதந்திரம் பெற்ற மக்களாக ஆசிர் வதிக்கப்பட்ட மக்களாக வாழுகின்றோம்.
ஆகவவே நாங்கள் இந்த விதமாக மிகவும் மோசமான ஒரு மரணத்தை தனதாக்கி எமக்காக பாடுபட்டு இறந்த எமது நாயகன் யேசுநாதருக்காக,
இந் நந்நாளிலே விசேடமாக நன்றி கூறி அவருடைய சிலுவையின் காரணமாகவே எமது பாவங்களுக்காக மனம் வருந்துவோம்.
நாங்கள் எமது குறைகள், தவறுகள், குற்றங்களினால் எத்தனையோ வகைகளில் மற்றவர்களுக்கு ஒரு சிலுவையாக இருக்கலாம்.
எமது வார்த்தைகளும், எமது செய்கைகளும் மற்றவர்களை தாக்கும் வகையில் அமையலாம்.
ஆகவே தான் இந்த பாவங்களை இந்த குறை, குற்றங்களை எமது வாழ்க்கையில் இருந்து அகற்றி இந்த சிலுவையில் எமக்காக மரணித்த யேசு நாதருக்காக ஒரு புது வாழ்வு வாழ்வோம்.
இச் சிலுவையில் இருந்து நாங்களும் பாடம் கற்றுக் கொண்டு அந்த நாயகன் எமக்காக எப்படி மரித்தாரோ நாங்களும் எமது பாவங்களுக்கு மரித்து இறைவனுக்காக வாழுவோம்.
இறைவனை புகழ்வோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் புனித வெள்ளி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.