இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல், தனிப்பட்ட காரணங்களை கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அசாந்தா முன்னதாக இலங்கை அணியின் மேலாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில், ‘அசாந்தாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம், கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் அவர் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்கு நன்றி’ என கூறினார்.
61 வயதான அசந்த, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கிண்ண தொடரிலிருந்து இந்த பணியை ஆற்றிவருகிறார்.
கடந்த டிசம்பரில் மட்டுமே இலங்கையின் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக அசந்த மீண்டும் நியமிக்கப்பட்டார். தேர்வுக் குழுவின் தலைவராகவும், 2012ஆம் ஆண்டிலும், பின்னர் 2018ஆம் ஆண்டிலும் இரண்டு முறை பணியாற்றியுள்ளார். அசந்த இலங்கை அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் டெஸ்ட் வரலாற்றில் நாட்டிற்காக முதல் பந்தை வீசியவராக பெயர் பெற்றவர்.