இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்தும் செயற்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட உள்ளது.
குறித்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்தும் செயற்பாடு கொழும்பிலுள்ள 6 வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, ஹோமாஹம ஆதார வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஏனைய வைத்தியசாலைகளில் அடுத்த வாரமளவில் கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் அடுத்த நான்கு நாட்களுக்குள் ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை பயன்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே எந்தவித அச்சமும் இல்லாது தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என ஹேமந்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை சுகாதார பணியாளர்களில் 25 வீதமானோருக்கும் இராணுவத்தில் 25 வீதமானோருக்கும் பொலிஸில் 25 வீதமானோருக்கும் தற்போது கைவசமுள்ள ஐந்து இலட்சம் தடுப்பூசிகளைகளை பயன்படுத்தவும் அடுத்த கட்டத்தில் கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை வயது அடிப்படையில் பொது மக்களுக்கு பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.