தமிழர்கள், தமது தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்ததோடு சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதைவிடுத்து, இன முறுகலை மேலும் வலுவடையைச் செய்யும் விதத்திலும் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அரசாங்கத்திலுள்ள சிலர் கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.
இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதியும் பிரதமரும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் திறம்பட முன்னெடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.