தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறார்.
இதில் 28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை, ஒரகடம், மாநல்லூர், தடங்கம், ஆலங்குடி, ஆலந்தூர், ராசாம்பாளையம், பெரிய கோளப்பாடி, பெரிய சீரகப்பாடி மற்றும் உமையாள்புரம் ஆகிய 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் முதலீட்டில் 68 ஆயிரத்து 775 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன.
இதேவேளை 3 ஆயிரத்து 489 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்கனவே முடிவுற்ற 13 திட்டப்பணிகளையும் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
இவை தவிர ஏற்கெனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயற்பாட்டையும் முதலமைச்சர் ஆரம்பித்து வைக்கிறார்.
இந்த ஒப்பந்தங்கள் மூலமாக சுமார் 2 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.