பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் ஆலமரத்திற்கு கீழ் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக மறைந்துவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று அண்மையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
குறித்த பிள்ளையார் சிலையானது பொலீஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த விநாயகருக்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த சிலையை அனுமதியின்றி தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை அகற்றப் போவதாகவும் கிளிநொச்சி வீதி
அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பூநகரி பொலீஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.
இந் நிலையில் தற்போது குறித்த விநாயகர் சிலை காணாமல் போயுள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விநாயகருக்கு பதிலாக புத்தர் சிலைவைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா எனவும், கேள்வி எழுப்பும் பொது மக்கள் மத ரீதியாக பாரபட்சங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.