யாழ் – நல்லூர் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்றையதினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் காவல்துறையினரின் பாதுகாப்போடு, அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் சிவில் சமூக அமைப்பு எனும் குழுவினரால் குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இன்றைய தினம் குறித்த இடத்தில் அனுமதி பெறாது கொட்டகை அமைக்கப்பட்டமை தவறு எனவும், உடனடியாக இன்று இரவிற்குள் அதனை அகற்றுமாறும் தெரிவித்து,
யாழ் மாநகர முதல்வரின் எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.
யாழ் மாநகர முதல்வரின் எழுத்து மூலமான கடிதத்தினை மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாசித்தார்.
அதனையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன், நீதிமன்ற அனுமதி பெற்றால் மாத்திரமே போராட்டக்காரர்களை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.