இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம், அனைத்து மக்களினாலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மேலும், சுதந்திர தினத்தினை முன்னிட்டு மக்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு தேசிய கொடியினை பறக்கவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கையின் 73ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30மணியளவில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கீதம் சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் பாடப்பட்டதுடன் தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தார். இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள், மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளன.
இதன்போது தேசியக் கொடியினை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஏற்றி வைக்க, தொடர்ந்து தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மத தலைவர்களின் ஆசியுரை, அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றன. இதேபோன்று கல்முனையிலும் பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டது.
மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது. இதேவேளை வடக்கு மகாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சியிலும் சுதந்திரதின நிகழ்வுகள், அம்மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடியினை வடமாகாண ஆளுநர் ஏற்றி வைத்ததுடன், தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத தலைவர்களின் ஆசி இடம்பெற்றதுடன், வட.மாகாண ஆளுநர் உரையாற்றினார். குறித்த நிகழ்வில் மத தலைவர்க்ள், வட மாகாண ஆளுநர் பி.எச்.எம் சார்ள்ஸ், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ் உயர் அதிகாரிகள், முப்படையினர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று மன்னாரிலும் சுதந்திர தின நிகழ்வுகள், மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம்பெற்றது.
தேசியக்கொடியினை பிரதம வருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதேபோன்று திருகோணமலை, மலையகம், தெற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக அங்குள்ள எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.