பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தவணையிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தினால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ‘பி’ அறிக்கை ஊடாக பேரணியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மாத்திரமே பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.