மறைந்த விஜயகாந்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இரங்கல்
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இரங்கல் செய்தி ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிறந்த நடிகர் என்ற தொழில்முறை அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் அப்பால், மனிதம் நிறைந்த மனிதரும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர பற்றாளருமான விஜயகாந் அவர்களின் மறைவுச் செய்தி மனதைக் கனக்கச் செய்திருக்கிறது.
ஈழத்தமிழர்களையும், அவர்களது இனவிடுதலைப் போராட்டத்தையும் தத்தம் சுயங்களை நிலைநிறுத்துவதற்காகப் பயன்படுத்திக்கொண்ட எத்தனையோ தமிழகத் தலைவர்களிலும், நடிகர்களிலும் நின்று முற்றிலும் மாறுபட்ட ஒருவராகவே, ஈழத்தமிழர்களுக்கும் விஜயகாந் அவர்களுக்கும் இடையிலான ஊடாட்டம் இருந்திருக்கிறது. அந்தளவுதூரம் தமிழர்களையும், தமிழின விடுதலைப் போராட்டத்தையும் ஆழ நேசித்தவர் அவர்.
தன் கலைத்துவ வெளிப்பாட்டின் வழி, ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தாய்த்தமிழகத்தில் பகிரங்கமாக நிதி திரட்டிய அவரது தமிழ்த்தேசியப் பற்றுறுதியும், தீவிரத்தன்மையும் இன்றும் எம் இதயங்களைச் சிலிர்க்க வைக்கிறது.
பேச்சளவில் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் இருக்கும் ‘சமத்துவம்’ என்ற சொல்லுக்கு “கடைநிலைத் தொண்டன் வரை ஒரே உணவு” என்ற ஆகப்பெரும் அடிப்படைச் சமத்துவ அர்த்தம் புகுத்தி, அதனைச் செயலாக்கிய மாபெரும் கொடையாளன்.
மனிதம் நிறைந்த அந்த மனிதனின், மாபெரும் கலைஞனின் மறைவுக்கு என் இறுதி அஞ்சலிகள் என கூறப்பட்டுள்ளது.