யாழில் மேலும் 22 பேருக்குக் கொவிட் – 19 தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 778 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 22 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனையில் முடிவைக் கண்டறிய முடியாதது என அறிக்கையிடப்பட்டதுடன்,
இன்று மீளவும் அவர்களிடம் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டபோது ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளிகளில் திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும் மூவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மூவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள், இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்றவர்கள்.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் 2 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொறியியலாளர் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைக்கும் இன்று தொற்று உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.