வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும், என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும். தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று வடக்கு மற்றும் தெற்கில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நெருக்கமான நட்புறவுகளை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாகும். சிங்கள மொழியை கற்றுக் கொள்வதில் வடக்கு மாணவர்களிடம் பெரும் ஆவலைக் காண முடிகின்றது.
வடக்கில் ஆசிரியர்கள் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும், கல்வியமைச்சின் வளங்களை வடக்கு, கிழக்கு, தெற்கு என எந்தவித பாரபட்சமுமின்றி அனைத்து பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
வடக்கில் விவசாயம், கல்வி, மீன்பிடி கைத்தொழில் போன்ற துறைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள கல்வியமைச்சர், வடக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய மற்றும் தலையீடு செய்ய வேண்டிய துறை சார்ந்த விடயங்களை எமது அரசாங்கம் இனங்கண்டுள்ளது. அவற்றில் கல்வி, விவசாயம் மற்றும் மீன்பிடி கைத்தொழில் போன்றவை முக்கியமானதாகும்.
மேற்படி துறைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு தற்போது அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாத விவாதங்களை விடுத்து மேற்படி வேலைத் திட்டங்கள் மூலமான பிரதி பலன்களை பெற்றுக்கொள்வதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.