வடக்கில் உள்ள தீவுகளில் மின் உற்பத்தி திட்டத்தை நிர்மாணிக்க தீர்மானித்துள்ள நிலையில் இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார்.
இதற்கு உரையாற்றும் போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்ததுடன் வடக்கின் மூன்று தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டு வரும் கருத்து மிக தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இந்த மூன்று தீவுகளுக்குமான மின்சாரம் இன்றும் டீசல் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசிய தேவையாகும்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலை மனுக்கோரலுக்கு விடப்பட்டது. இது இலங்கையின் முதலாவது கலப்பு விலை மனுக்கோரலாகும்.
காற்று மற்றும் சூரிய சக்தியினால் மின்சாரத்தை உருவாக்கும் முதலாவது வேலைதிட்டமாகவே இது அமைந்தது. எனவே இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச விலை மனுக்கோரல் விடப்பட்ட வேளையில் அதற்காக முன்வந்த தரப்பினர் பலவீனமானவர்களாக இருந்தனர். எனவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது விலைமனுக்கோரலை அறிவித்தனர்.
இதற்கு நான்கு நிறுவனங்கள் முன்வந்ததுடன் அதில் ஒன்று சீனாவினதும் மற்றயது இந்திய நிறுவனமாகவும் இருந்தது. இந்த விலை மனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக்கொண்டது.
எனவே இந்த விலை மனுக்கோரலில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் இந்த திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் எமக்கு அறிவித்தார். இந்த விடயத்தில் இப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை என்பதுடன் எவருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவும் இல்லை. எனவே இதில் எந்தவொரு நாட்டின் தலையீடுகளோ அல்லது இராஜதந்திர நகர்வுகளோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எமது நாட்டின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை, எமது நாட்டின் தேசிய கொள்கையை உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் அடிபணிந்து தீர்மானம் எடுக்க மாட்டோம் என்பது தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் அவர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.