தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார்.
ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க முடிவு எட்டப்பட்டால், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என கூறினார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை 286 பில்லியன் ரூபாயினை செலவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை குறித்து இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்றும் நிலைமை குறித்து வாரத்திற்கு இருமுறை கொரோனா தடுப்பு செயலணி ஆராய்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.