எகிப்திய நாட்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் சுமார் 5,000 ஆண்டுகள் மிக பழமையான மதுபான வடிப்பாலையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆலை உலகின் பழமையான பியர் வகை மதுபான வடிப்பாலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எகிப்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக இணைந்து, எகிப்தில் அபைடாஸில் இருக்கும் இந்த பழமையான மதுபான வடிப்பாலையை கண்டறிந்துள்ளனர். குறித்த அபைடாஸ் எனும் இடம், பாலைவனத்தில் இறப்பவர்களை புதைக்கும் இடமாகும்.
இவ் பியரை தயாரிப்பதற்கு, தானியங்கள் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்தியுள்ளனர். அவ் மதுபான கலவையை சூடாக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும், சுமார் 40 வகை பண்ட பாத்திரங்களுடன் பல அலகுகளை இந்த ஆய்வு குழு கண்டறிந்துள்ளது.
“Supreme Council of Antiquities” என்ற அமைப்பின் கருத்துப்படி, குறித்த பியர் வடிப்பாலை அரசர் நார்மரின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, உலகிலேயே அதிக அளவில் பியர் வகை மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, மிகவும் பழமையான வடிப்பாலையாக இந்த ஆலை இருக்கலாம் என கருதப்படுகிறது.
நார்மர் அரசர் 5,000 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய எகிப்து நாட்டில் ஆட்சி புரிந்தார், அவர்தான் எகிப்தை ஒருங்கிணைத்து முதல் சாம்ராச்சியத்தை நிறுவியவர் எனவும் கருதப்படுகிறது.
இந்த பியர் ரக வடிப்பாலையில் 8 மிக பெரிய பகுதிகள் இருக்கின்றன.அவை ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளம் வரை உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், 40 மண் பாத்திர பண்டங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது என எகிப்தின் “Supreme Council of Antiquities” அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தஃபா வசிரி தெரிவித்துள்ளார்.
தானியங்கள் மற்றும் தண்ணீர் கலந்த கலவை வகை பியர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. இந்த கலவை மட்பாண்டங்களில் சூடுபடுத்தப்பட்டது என்கிறார் அவர்.
எகிப்தின் அன்றைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பின்னர் செய்யப்படும் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பியரை விநியோகம் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு, அந்த வடிப்பாலை பாலைவனத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம், என இந்த ஆராய்ச்சியின் துணைத் தலைவர் மேத்யூ ஆடாம்ஸை மேற்கோள்காட்டி, எகிப்தின் சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
பியர மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளையில், ஒரே தடவையில் 22,400 லிட்டர் பியர் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.