60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நபர்
சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநிறுத்தியுள்ளார்.
15/01 திங்கட்கிழமை காலை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் மேற்படி உலக சாதனை நிகழவு ஆரம்பித்திருந்தது.
இதன்போது 1550கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 19நிமிடம் 45செக்கன்களில் 1500 மீற்றர் தூரம் தனது தலைமுடியின் உதவியை மாத்திரம் பயன்படுத்தி இழுத்து உலக சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சாந்தாதேவி,சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, தென்மராட்சி அபிவிருத்திக்கழக தலைவர் அ.கயிலாயபிள்ளை, ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர் க.வேலாயுதபிள்ளை, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தி.தங்கவேலு மற்றும் மூச்சு திரைப்பட இயக்குநர் கலைஞானி குமரநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் விழாவிற்கான அனுசரணையாளரான நியூ வி.எம்.கே நகை மாட உரிமையாளர்,சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் கடந்த வருடம் தனது முகத் தாடியின் உதவியோடு 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை 7நிமிடங்களில் 400மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடதக்கது.