திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் விரைவில்…
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் அதிபர் ஊடக மையத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,கடந்த ( 2024.03.05 ) ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்ததுடன் 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 31–60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளதுடன் 60–90 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கட்டண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 90–180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டதுடன் 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் மற்றும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.