நேற்றையதினம் தையிட்டியில் தனியார் காணியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றில், குறித்த விகாரைக்கு எதிரான போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த, கான்ஸ்டபிள் தரமுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெறும்போது அருகே இருந்த பலாலி பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி அவரை கண்டிக்காமல், தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
இதனை அவதானித்த போராட்டக்காரர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக, கால் முறிப்பதுவும் தொலைபேசி களவெடுப்பதுவும் பொலிஸாரின் கடமையா, கொலை குற்றச்சாட்டு மற்றும் 9 குற்றச்சாட்டுக்கள் உள்ளவருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியா என கோஷமிட்டனர்.
இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணொளி எடுப்பதை நிறுத்திவிட்டு நகர்ந்தார். பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு எதிராக அடக்குமுறைகளை எடுத்துக் காட்டுவதாக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்தனர்.