நியூஸிலாந்தில் திருட்டு குற்றச்சாட்டில் பதவி விலகிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்
நியூஸிலாந்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தக நிலையங்களில் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து பதவி விலகல் செய்துள்ளார்.
கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையிலேயே ஆடம்பர சில்லறை விற்பனை நிலையமொன்றில் பெருமளவு ஆடைகளை திருடியயதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் நியூசிலாந்து பசுமைக் கட்சியின் எம்.பி.யும் அதன் நீதித் தொடர்பாளருமான கோல்ரிஸ் கஹ்ராமன் ஆவார்.
கோல்ரிஸ் கஹ்ராமன் தனது குடும்பத்துடன் சிறுவயதில் ஈரானில் இருந்து வெளியேறி நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றவராவார்.
அத்துடன் நியூசிலாந்துக்கு அகதியாக வந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி. என்பதுடன் சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு இவர் ருவாண்டா, கம்போடியா மற்றும் தி ஹேக் ஆகிய நாடுகளில் உள்ள ஐ.நா நீதிமன்றங்களில் குற்றவியல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், ஆக்லாந்து, வெலிங்டனில் அமைந்துள்ள உயர்தர வர்த்தக நிலையங்களில் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கோல்ரிஸ் கஹ்ராமன், தனது செயல்களுக்கு முழுப் பெறுப்பேற்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.
தனது செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எனது வேலை தொடர்பான அழுத்தங்களால் எனது மனநலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது.
நான் நிறைய பேரை ஏமாற்றிவிட்டேன், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.