வட மாகாணத்தில் சீனாவின் உதவி திட்டத்தில் கடற் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண மக்களுக்காக சீன அரசிடம் இருந்து சுமார் 1500 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெறவுள்ள நிலையில் குறித்த நிதியுதவியில் அரிசி, கடற்தொழிலாளர்களுக்கு வலை மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
அது மட்டுமல்லாது ஜப்பான் நாட்டு அரசாங்கத்தினால் சுமார் 1600 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் அதற்கான வேலை திட்டங்களை தயார் செய்து வரும் நிலையில் ஆசிய அபிவிருத்தி வாங்கியும் எமக்கு உதவத் தயாராக இருக்கிறது.
ஆகவே நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் புதுடில்லி செல்ல உள்ள நிலையில் இந்தியாவும் எமக்கு பல மில்லியன் ரூபாய் உதவித் திட்டங்களை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.