பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் – உச்சக்கட்ட பதற்ற நிலை
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஈரான் புரட்சிப்படையின் தளபதி குவாசம் சுலைமானியின் நினைவு தினத்தில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஈரானுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை குறிவைத்து ஈரானின் புரட்சிப்படை தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.
குஹே சப்ஸ் பகுதியில் குறி வைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன என ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்,
பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது.
பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.