யாழ். ராணி ரயில் சேவை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
யாழ். ராணி ரயில் சேவை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது இந்த ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிராந்திய ரயில் முகாமையாளர் தெரிவித்தார்.
இந்த ரயிலை இரத்மலானைக்கு அனுப்பி சீர்செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், சீரமைப்பு பணிக்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து தெளிவாக சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருந்த காலத்தில், அவரது முயற்சியால் இந்த சேவையை துவக்கினர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டம் சென்று தினசரி பயணத்தை மேற்கொள்ளும் அரச சேவையாளர்கள், தனியார் துறை பணியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, 2022 ஜூலை 11 ஆம் தேதி இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.