உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படாடுள்ள STEAM பாடத் திட்டத்தினை அர்த்தபூர்வமானதாக வெற்றியடைய செய்வதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய ரீதியில் இன்று (31.03.2023) ஆரம்பித்து வைக்கப்பட்ட STEAM எனப்படும் புதிய பாடத் திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய பாடத்திட்ட அறிமுகத்தின் பிரதான ஆரம்ப நிகழ்வு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சமநேரத்தில், வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதுடன் பிரதான நிகழ்வுகள் நிகழ்நிலை(சூம்) மூலம் இணைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“உலக ஒழுங்கில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ள – ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற, தானியங்க தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு ஏற்ற சூழலை எமது எதிர்காலத் சந்ததியினர் மத்தியில் உருவாக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விமுறைமை வெற்றியடைவதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் எமது எதிர்காலச் சந்ததி, வாழ்வியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து கொள்ளும் நிலை உருவாகும்.
இந்த புதிய பாடத் திட்டத்தினை உருவாக காரணகர்த்தாவாக விளங்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வழிப்படுத்திய பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.