பாவம் புண்ணியம் இந்த இரண்டிற்கும் மூலகாரணம் மனம் தான். நாம் கெடுதலான விசயங்களை செய்யும் போது பாவமும், நன்மைகள், நல்ல விசயங்களை செய்யும் போது புண்ணியமும் ஏற்படுகிறது. பாவபுண்ணியங்கள் பின்வரும் காரணங்களால் உருவாகிறது. நமது சொல், பேச்சு, நமது செயல், நமது அங்க அசைவுகளாலும், உண்டாகிறது .
உண்மையை சொல்லப்போனால் ஐம்பொறிகள் என்று சொல்லக்கூடிய, மெய் , வாய், கண், மூக்கு, செவி. என்ற உடம்பில் உள்ள உறுப்புகளும் பாவங்களுக்கு துணைபோகின்றது.
ஒருவர் மீது இருக்கும் கோபத்தால் வார்த்தைகளை தரமில்லாமல் பேசுவது, கடுஞ்சொற்கள் பாவிப்பது, உண்மை எது என்று தெரியால், கண்ணால் பார்ப்பதை வைத்தும் காதால் கேட்பதைவைத்தும், ஒருவரை தவறாக புரிந்து அவரைப்பற்றி தவறான எண்ணங்களை நினைக்கும் போது, மனதில் அழுக்கு, பாவம் ஒட்டிக்கொள்கிறது.
கண்ணால் பார்த்தது உண்மை இல்லையெனில், காதால் கேட்டது உண்மை இல்லையெனில் அவற்றை நம்பி மற்றவர்களுடன் புறங்கூறல், இந்த புறங்கூறலால் கேட்பவர் மனைதையும் கெடுத்தல் , தவறாக எண்ணவைத்தல் இவைகள் எல்லாம் பாவங்களை அதிகரிக்க செய்கின்றன.
புறங்கூறுபவரை விட கேட்பவருக்கு தான் பாவங்கள் அதிகமாகிறது என்று மெஞ்ஞானம் கூறுகிறது.
மனிதனுடைய எட்டு நல்ல குணங்கள். தயை, சாந்தி, அநசூயை, சௌசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அசுப்ருகா என்பவை அஷ்ட குணங்கள்.
1)எல்லா உயிர்களிடத்திலும் நிறைந்த அன்பு வைத்தல் வேண்டும்,
2)எல்லா இடங்களிலும் இன்பதுன்பங்கள் எது நிகழ்ந்தாலும் பொறுமையோடு இருத்தல் வேண்டும்
3) பொறாமை படாமல் இருத்தல் வேண்டும்
4) சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும். அகம்புறம் நன்றாக சுத்தமாக இருத்தல் வேண்டும் .
5)தானும் சிரமப்படாமல் மற்றவர்களுக்கும் சிரமம் கொடுக்காதிருத்தல்.
6) போகிற இடமெல்லாம் நாமே ஒரு ‘தீபம் மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது
7) கருமித்தனம் இல்லாமல் தானதர்ம சிந்தையோடு இருப்பது
8) பற்றின்மை, ”ஆசையின்மை” . அத்தனை கெட்டதுக்கும் ஆணி வேராக இருப்பது ஆசைதான். இந்த எட்டு குணங்களில் குறைந்தது 4 அல்லது 5 எம்மிடம் இருந்தால் கூட பாவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
மனிதன் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல், தம்மால் முடிந்த வரை சமுதாயத்திற்கு உதவி செய்ய வேண்டும்.
சத்தியம், தர்மம், சாந்தம், அனைவரிடமும் அன்பு செலுத்துதல், அகிம்சை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். காமம், கிரோதம் (கோபம்) , லோபம் (பேராசை) , மோகம், மதம் (பெருமை) , மாட்சற்யம்(பொறாமை) ஆகியவற்றை கட்டுப்படுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும்.
இவ்வாறு வாழ்ந்தால் பாவங்களில் இருந்து நாம் தப்பலாம்.
நல்ல செயல் நல்ல சிந்தனை , நல்ல எண்ணம் கொண்டு செய்யும் அனைத்து விசயங்களும் புண்ணியமாகும். நாம் இப்பொழுது புண்ணிய காரியம் ஒன்று செய்தால் 4 பாவச்செயல்களை செய்கிறோம். புண்ணிய பலன் கூடாமலும் பாவத்தின் தன்மை குறையாமலும் போய்விடுகிறது.
இன்று பாவங்கள் அதிகரித்துவிட்டது. கண்ணால் பார்க்கும் பாவம், காதால் கேட்கும் பாவம் , வாயால் பேசும் பாவம் இந்த மூன்று பாவங்களும் இப்பொழுது எல்லோர் கையிலும் உள்ள கை பேசி, போன்ற நவீன ஊடகங்களால் ஏற்படுகின்றது.
சீரியல்கள் பார்த்து பார்த்து வில்லத்தனமான எண்ணங்கள், செயல்கள் பெருகிவிட்டது. ஏற்கனவே நம் பழம்பிறவிகளில் சேர்த்தவினை போதாது என்று வினைகளை சேர்த்துக்கொண்டே போகிறோம்.
ஒரு குடும்பத்தில் உண்மையான அவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் பொழுது போக்கிற்காக நாட்டாமை வேலை பார்க்கிறோம் .
வீண்பேச்சுக்களை வளர்க்கிறோம். உண்மையிலேயே நாம் செய்வது சரியா? தவறா என்று சிந்தித்து செயற்படும் எந்த மனிதர்களாலும் இந்த தவறுகளை செய்யமுடியாது.
காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கையில், இருக்கும் வரை நல்ல செயல்களை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அது நாளைய எங்கள் தலைமுறையை காக்கும். பழம்பிறவிகள் பற்றி நமக்கு வேண்டாம். ஏனெனில் அது பற்றி நமக்கு தெரியாது. என்ன என்ன பாவங்கள் செய்தோம் எங்களுக்கு ஏன் இந்த துன்பம் என்று எங்களுக்கு தெரியாது.
அதேபோன்று இன்னொரு ஜென்மம் இருக்கா என்பதை நம்ப முடியவில்லை அதைப்பற்றியும் கவலை வேண்டாம். உங்களுடைய முன்னைய சந்ததிகள் என்ன செய்தார்கள் என்று தெரியாது ஆனால் உங்களுக்கு அடுத்த ஏழு தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்லது செய்யலாம் இல்லையா? அவர்கள் உங்கள் வாரிசுகள், உங்கள் தலைமுறை.
பாட்டன் சொத்து பேரனுக்கு சொந்தம் என்றால், நீங்கள் செய்யும் நல்லது கெட்டதன் விளைவுகள் அவர்களையும் பாதிக்கும். பாவம் செய்தவன் நன்றாக தானே இருக்கிறான். நல்லதைச் செய்து நாம் என்ன கண்டோம் என்று பலரும் அலுத்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். சிந்திக்க வேண்டும் கடந்துவந்த காலங்களில் நமது சொல்லால், செயலால், அங்க அசைவுகளால் எந்த தவறையும் பண்ணியதில்லையா என்று.
அவ்வாறு நீங்கள் தவறு செய்யாதவரை நீங்கள் அனுபவிக்கும் இந்த துன்பங்களுக்கு வேறு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? ஒன்று நீங்கள் பிறவி தோறும் செய்த பாவங்கள்(வினை)அல்லது உங்கள் முன்னோர்கள் செய்த பாவச்செயல்கள்.
இந்த இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் தான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்கள். நடந்து முடிந்தவற்றை மாற்ற முடியாது . ஆனால் இது இனிவரும் உங்கள் சந்ததிக்கு நிகழாமல் தடுக்கலாம் இல்லையா?
பாவம் தன் பலனைக்காட்டாதவரைக்கும் அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்ததாகவே பொருள் கொள்ளலாம். ஆனால் நிச்சயம் செய்த பாவச்செயலின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. தர்மத்தின் வழியில் வாழ்வதே புண்ணியம். தர்மத்தை புறக்கணிப்பதே பாவம்.