சீனாவின் கடனுதவியுடன் கொழும்பில் கட்டப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், சீன மொழி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கடனுதவியுடன் கட்டப்பட்ட தாமரைக் கோபுரம், 2019ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்படவில்லை.
தாமரைக் கோபுரத்தை பராமரிப்பதற்கு ஏற்படும் சிரமங்கள் காரணமாக அதனை திறந்து விடுவதில் சிக்கல்கள் நீடித்து வந்தது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் நாளை அதனை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாமரைக் கோபுர நுழைவுச் சீட்டின் வடிவம் சமூக ஊடகங்களில் பரவி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் அச்சிடப்பட்டுள்ள நுழைவுச் சீட்டில் இலங்கையின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆங்கிலம், சிங்களம் ஆகியவற்றுடன் சீனமொழியில் நுழைவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நுழைவுச் சீட்டில், சிறுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளைப் போலவே, சீனப் பிரஜைகளுக்கும் தனியான நிரல் அச்சிடப்பட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சீனர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு சீனாவின் கொலனி ஆகிக் கொண்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.