VAT வரி அதிகரிப்பினால் எமது சேவைகள் முற்றாக பாதிக்கப்படும் – செ.சுஜிதரன்
2024ஆம் ஆண்டில் இருந்து VAT வரி அதிகரிக்கப்பட விற்கின்ற காரணத்தால் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகள் அதிகரிக்க உள்ளன.
கிட்டத்தட்ட டீசலின் விலையானது 70 ரூபாய் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. அப்படி விளையுரினால் நமது பாடசாலைகளுக்கான சேவைகளை செய்வது பெரும் கேள்விக் குறியாக இருக்கப் போகிறது என யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை சேவை சங்கத்தின் உபதலைவர் செ.சுஜிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
20 வீதத்துக்கு மேல் டீசலின் விலை அதிகரிக்கும் போது நாங்களும் எமது கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அது மட்டுமன்றி போக்குவரத்து பிரச்சனையால் வாகனங்களின் பாகங்களின் விலைகளும் அதிகரிக்கும். இவ்வாறு விலைகள் அதிகரித்தால் எமது சேவையை தொடர்ந்து செய்ய முடியாது.
பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் வற் அதிகரிப்பினால் வருமானத்தில் பிரச்சனை ஏற்படும். இந்நிலையில் அவர்கள் தமது பிள்ளைகளை தாமே பாடசாலைக்கு அழைத்துச் செல்கின்ற சூழ்நிலை ஏற்படும். இதனால் எமது சேவைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட போகின்றன.
எரிபொருளின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்கும் போது 750 ரூபாவாக இருந்த ஒரு பிள்ளையின் போக்குவரத்து எமது கட்டணத்தை 1000 ரூபாவாக நாங்கள் அதிகரிக்க வேண்டும்.
எமக்கு மானிய விலையில் டீசலினை வழங்கினால் நாங்கள் தொடர்ந்து சேவையை செய்யலாம். அல்லது எமது சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றார்.