Welcome to Jettamil

அம்பிகைக்கு ஆதரவளித்த தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல்!

Share

கெண்டன் பகுதியில் (Kenton) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 17 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 100 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அவரது இல்லத்துக்கு வெளியில் நேற்று ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்நிலையில் போராட்ட களத்திற்குச் சென்ற பொலிஸார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியதுடன் தடியடியும் நடத்தியதாக தெரியவருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் அதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது ஒருவர் தாக்கப்பட்டதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உடல்நலம் மோசமடைந்து வரும் அம்பிகை செல்வகுமார் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஈழதேசத்தை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்தார்.

அதன்போது அவருக்கு ஆதரவாக இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தால் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி கோரி போராட்டங்கள் மற்றும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு  பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

அதேநேரம் அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

எந்தவொரு அரசாங்கமும் தங்கள் மனித உரிமைப் பதிவின் சுயாதீனமான சர்வதேச மதிப்பாய்வுக்கு பயப்படக்கூடாது.

அம்பிகையின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இப்போது அவரது நலன் குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஷூப்ரிட்ஜ் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை