பழைய சிம் அட்டைகளுக்கு மீண்டும் பதிவு கட்டாயம் – அமைச்சரவை அதிரடி முடிவு!
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து மொபைல் சிம் கார்டுகளையும் மீண்டும் பதிவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை இன்று அதிரடி அனுமதியை வழங்கியுள்ளது.
பழைய சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களின் முழுமையான விபரங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லை. இது குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது பாரிய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பழைய சிம் கார்டுகள் மட்டுமன்றி, 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் சிம் கார்டுகளைப் பெறுவதற்கும், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சிம் கார்டுகளை வழங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





