இலங்கையில் இன்றையதினம் கறுப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இந்த கறுப்பு ஞாயிறு தினம் இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் கறுப்பு ஆடை அணிந்து திருப்பலியில் இன்றைய தினம் அதிகாலை பங்கெடுத்தமையை அதிகளவான தேவாலயங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படும் என இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்த போதிலும் இன்னும் அது நிகழவில்லை.
எனவே அமைதியான முறையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஞாயிறானது ஒரு நாள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனவும் தெரிவித்தார். அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி தாமதிக்கப்படுவதை கண்டித்து இன்றைய தினம் (07.03.2021 ஞாயிறு) கொழும்பில் கறுப்பு ஞாயிறு போராட்டம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
குறித்த இந்த கறுப்பு ஞாயிறு போராட்டத்துக்கு ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.