கடந்த மாதத்தில் நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புகள் வெடிப்புகளுக்கு, கலவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் நம்புவதாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாங்கள் 12 எரிவாயு மாதிரிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சோதனைக்காக அனுப்பினோம், அவை அனைத்தும் 47% அல்லது 48% புரொப்பேன் கலவையைக் காட்டுகின்றன.
கலவையில் ஏற்பட்ட இந்த மாற்றம் வெடிப்புகளுக்கு வழிவகுத்ததா என்பது குறித்து இன்னும் இறுதியான விஞ்ஞான ரீதியான முடிவுகள் எதுவும் இல்லை.
இருப்பினும், வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த சிக்கல் எழுந்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
எரிவாயு சிலிண்டரில் எரிவாயுவை உள்ளடக்குவதற்கான ஒழுங்குமுறையை இலங்கை தர நிர்ணய நிறுவனம் முன்வைக்காததிலேயே தொழில்நுட்ப சிக்கல் நீடிக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு எரிவாயு சிலிண்டரில் உள்ள புரொப்பேன் மற்றும் புடேன் இடையிலான விகிதத்தை, வழக்கமான 70 இற்கு30 என்ற அளவில் இருந்து, ஆபத்தான 50இற்கு 50 என்ற கலவைக்கு இரண்டு எரிவாயு நிறுவனங்களும் மாற்றியதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.