நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் வலுசக்தியை மையமாகக் கொண்டே அமையும் – ஜனாதிபதி
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே அரசாங்கத்தின் இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார சபை மறுசீரமைக்கப்படும் போது, புதிய நிறுவனங்களின் கீழ் ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் என அவர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் எழுந்துள்ள சவால்களைப் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்த நேரத்தில் அரசாங்கத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர். புதிய நிறுவனங்களுக்கான கூட்டு ஒப்பந்தம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது..
நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் வலுசக்தித் துறையை மையமாகக் கொண்டே அமையும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உயர் மட்ட நிதி ஒழுக்கத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளிப் பாதிப்பின் போது மின்சார சபை ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.





