கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, நடிகர் வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த 23 ஆம் திகதி சென்னை திரும்பினர்.
இதன்போது, அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வடிவேலுவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும், மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.