கெஹெல்பத்தர பத்மேவின் மற்றுமொரு கொலை முயற்சி அம்பலம்! – கம்பகா பாபா வாக்குமூலம்!
பாதாள உலகத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் திட்டமிட்டிருந்த மற்றுமொரு கொலை முயற்சி குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவரான கம்பகா பாபாவிடமிருந்து களனிப் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கெரவலபிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட சுமார் ஐம்பது T56 உயிருள்ள தோட்டாக்கள், கம்பகா பாபாவிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான பின்னணியைத் தற்போது அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பகா ஒஸ்மானைக் கொல்ல கெஹெல்பத்தர பத்மே தயாரானபோது, இந்தத் தோட்டாக்கள் தமக்கு வழங்கப்பட்டதாகச் சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய வெடிமருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்குமாறும், தேவைப்படும் போது அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதாகவும் கெஹெல்பத்தர பத்மே தன்னிடம் கூறியதாகவும் கம்பகா பாபா வெளிப்படுத்தியுள்ளார்.
ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்த கம்பகா பாபா:
கம்பகா பாபா நாட்டில் தங்கியிருந்த காலத்தில், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான மாத வாடகை அடிப்படையில் ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வீடுகளுக்கான வாடகையை கெஹெல்பத்தர பத்மேவே செலுத்தியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கம்பகா பாபா மேலதிக விசாரணைகளுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.





