இன்று பவதாரணியின் உடல் நல்லடக்கம்! முன்னேற்பாடுகள் தீவிரம்
இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடலை, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள லோயர் கேம்ப்பிள் இல் நல்லடக்கம் செய்வதற்காக முன்னேற்பாட்டு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 25 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் காலமானார்.
இவரின் உடல் நேற்று இந்தியாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பவதாரணி உடலை நல்லடக்கம் செய்வதற்காக பந்தல் அமைக்கும் பணி மற்றும் சமுதாய முறைப்படி அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணிகளை தொழிலாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிள் உள்ள அவரது சொந்த பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரை நல்லடக்கம் செய்து மணிமண்டபங்களை கட்டி இளையராஜா குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது தனது குடும்பத்தில் மூன்றாவதாக மறைவாக தனது மகளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு இசையமைப்பாளர் இளையராஜா அங்கு முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.