ஹல்துமுல்லையில் பஸ் விபத்து – சாரதி பலி, சிறுவன் உட்பட 8 பேர் காயம்!
கொழும்பு – வெலிமடை வீதி ஊவத்தென்ன, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஹல்துமுல்ல பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ் இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பஸ்ஸைச் செலுத்திய சாரதி சீட் பெல்ட் அணியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஸ் வேகப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, சாரதிக்கு அருகிலிருந்த கதவு திடீரெனத் திறந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த சாரதி, பஸ்ஸைக் கட்டுப்படுத்த முயன்ற போது அது அருகில் இருந்த பாறையில் மோதி வீதியின் குறுக்கே தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
கதவு திறந்திருந்தமையால், மோதலின் போது சாரதி பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் பஸ்ஸினால் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, வாகனத்தின் அடியில் சிக்கியுள்ளார். பிரதேச மக்கள் அவரை மீட்ட போதிலும், அவர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
காயமடைந்த 8 பேரில், 7 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வர் மேலதிக சிகிச்சைக்காகத் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




