வறுமையால் பாதாள உலகிற்கு விலைபோன கமாண்டோ வீரர்கள்! – இஷாரா செவ்வந்தியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில், கமாண்டோ இராணுவ முகாம்களில் உள்ள வீரர்கள் பாதாள உலகக் குழுக்களுக்குத் துப்பாக்கிதாரிகளாகப் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி இந்தத் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விசாரணையில் தெரியவந்துள்ளதாவது: ‘கமாண்டோ சலிந்த’ என்பவர், இராணுவ முகாம்களில் பொருளாதாரக் கஷ்டங்களில் வாழும் வீரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டுள்ளார். அவர்களை வட்சப் (WhatsApp) குழுவொன்றின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி, துப்பாக்கிதாரிகளாகப் பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒருவரே, கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டுள்ளார்.
இக்கொலையில், கெஹெல்பத்தற பத்மேவின் கட்டளைக்கிணங்க இஷாரா செவ்வந்தி, கமாண்டோ சமிந்துவை (சமிந்து தில்ஷான் பியுமங்க) கொலைக்கு பயன்படுத்தியுள்ளார். செவ்வந்தி, கமாண்டோ சமிந்துவுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி, அவரை தனது திட்டங்களுக்குள் சிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
பொருளாதாரச் சிக்கல்:
அதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைக்காக இஷாரா செவ்வந்தி பணம் எதுவும் வாங்கவில்லை எனவும், கெஹெல்பத்தற பத்மேவின் கைதின் பின்னரே செவ்வந்தி பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையின் போது, பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாகத் தான் தனது காதணியை அடகு வைத்துள்ளதாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
கமாண்டோ வீரர்கள் பாதாள உலகக் குழுக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தத் தகவல் பாதுகாப்புப் படைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





