தங்காலை துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரைப் பருகிய நாய்கள்!
ஹம்பாந்தோட்டை, தங்காலை கடற்றொழில் துறைமுகப் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை உட்கொண்ட மூன்று நாய்கள் வழமைக்கு மாறான வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தெற்குக் கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 51 பொதிகளில் அடங்கியிருந்த ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, தங்காலை கடற்கரையில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் பகுதியில் இருந்த கடல்நீரை அங்குள்ள மூன்று நாய்கள் அருந்தியுள்ளன. ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரைப் பருகியதன் காரணமாக அந்த நாய்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து சுற்றியுள்ளன.
இந்த விநோதக் காட்சியைக் கண்ட பிரதேசவாசிகள், நாய்களைப் பரிசோதனை செய்ததில், அவை ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரைப் பருகியதால் இவ்வாறு செயற்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.





