அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்கள்: கட்டண உயர்வு மற்றும் குலுக்கல் முறை நீக்கம்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் H-1B விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் (Howard Lutnick) தெரிவித்துள்ளார்.
முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகள்
- விசா கட்டண உயர்வு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையொப்பமிட்ட உத்தரவின்படி, H-1B விசா கட்டணம் ₹ 1.47 லட்சத்திலிருந்து ₹ 88 லட்சமாக (1 லட்சம் டாலர்) அதிரடியாக உயர்த்தப்படுகிறது.
இந்த ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய புதிய கட்டணம், செப்டம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்கும், 2026 ஆம் நிதியாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் மட்டுமே பொருந்தும்.
இதற்கு முன் விண்ணப்பித்தவர்கள், புதுப்பிப்பிற்காக விண்ணப்பித்தவர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு மீண்டும் நுழையும் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது.
இந்தக் கட்டண உயர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
- குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு:
தற்போதைய H-1B விசா நடைமுறையில், விண்ணப்பதாரர்கள் லாட்டரி முறையில் (குலுக்கல் முறை) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கு அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“திறன்வாய்ந்த பணியாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றும், “விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒதுக்கப்பட்டதை விட 7 முதல் 10 மடங்கு அதிகமாக உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை:
H-1B விசா பெறுபவர்களில் 74 சதவீதம் பேர் தொழில்நுட்பத் துறையிலும், வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆவர்.
“கல்வியாளர்களும் மருத்துவர்களும் அதிக அளவில் அமெரிக்கா வர வேண்டும். ஆனால் நிறுவனங்கள் பொறியாளர்களை மட்டுமே பணியமர்த்த விரும்பினால், அவர்களில் அதிக சம்பளம் பெறுவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“குறைந்த சம்பளம் உடையோர் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டையும் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குடும்ப உறுப்பினர்கள் வருகை கட்டுப்பாடு:
குறைந்த சம்பளத்திற்குப் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.





