அமெரிக்காவின் கடும் அழுத்தம் – ஜனாதிபதி அநுரவின் அடுத்த நகர்வு என்ன?
காலி கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ‘IRIS Dena’ கப்பலில் இருந்து உயிர் தப்பியவர்கள் மற்றும் ‘IRIS Booshehr’ கப்பலின் 208 பணியாளர்களையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைவர் ஜெய்ன் ஹோவெல், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானியப் பணியாளர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பது இலங்கையின் மனிதாபிமானப் பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும், இவர்களை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடும் என்பதால், அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என அமெரிக்கா பிடிவாதம் பிடித்து வருகின்றது.
அமெரிக்காவின் இந்தத் திடீர் அழுத்தத்தினால், ஈரானிய வீரர்களைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கடும் இராஜதந்திர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் இலங்கை, இந்த விவகாரத்தில் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளுமா அல்லது ஈரானுக்குச் சாதகமாகச் செயற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.





