வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு நாளை முதல் கனமழை எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
இலங்கைக்குத் தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சிறிய அளவிலான மேலடுக்கு சுழற்சி, தற்போது வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை மேகங்களின் வருகையினால், தற்போது நிலவும் கடும் குளிர் நிலை எதிர்வரும் 27ஆம் திகதி வரை சற்று குறைந்து வானிலை சீரடையும்.
தற்போது அறுவடைக்காலம் என்பதால், நெல் அறுவடை செய்யும் மற்றும் நெல் உலரவிடும் விவசாயிகள் இந்த மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பேராசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னரும் மீண்டும் ஒரு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




