நாட்டில் இன்றும் பிற்பகல் கனமழை: வங்காள விரிகுடாவில் ‘மொன்தா’ சூறாவளி உருவாக வாய்ப்பு!
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (அக்டோபர் 17) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழை எச்சரிக்கை:
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
கடற் பிராந்திய நிலை:
நாட்டைச் சூழவுள்ள பல கடற் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணிக்கு 20 – 30 km வேகத்தில் காற்று வீசும். ஏனைய கடற் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
சூறாவளி குறித்த அவதானம்
தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் அக்டோபர் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறாவளியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது சூறாவளியாக வலுவடைந்தால், இதற்குத் தாய்லாந்து (Thailand) நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட மொன்தா (Montha – உச்சரிப்பு: Mon-Tha) எனும் பெயர் வழங்கப்படும்.
இது வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் பிரதேசத்திற்கு இடையில் ஊடறுத்துச் செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையால் ஏற்படக்கூடிய தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.





