முடிந்தால் சம்பளத்தில் 10 ரூபாவை அதிகரித்துக் காட்டுங்கள்’ – ஜனாதிபதிக்கு ஜீவன் சவால்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை இந்த ஆண்டு 10 ரூபாயேனும் அதிகரித்துக் காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள இ.தொ.கா. தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முன்னைய அதிகரிப்புகள்: “2020 – 2024 காலப்பகுதியில் இரு சந்தர்ப்பங்களில் 250 மற்றும் 350 ரூபாய் சம்பள அதிகரிப்பினை நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.”
“எனவே முடிந்தால் இவ்வாண்டு அடிப்படை சம்பளத்தில் 10 ரூபாவையேனும் அதிகரித்துக் காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன்.”
தற்போதைய அரசாங்கம் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், அதற்கு நிச்சயம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்போது 1,750 ரூபாய் நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இது அடிப்படைச் சம்பளம் எனக் கூறப்பட்ட போதிலும், தற்போது அதனை ‘நாட் சம்பளம்’ என்றே குறிப்பிடுகின்றனர்.
அடிப்படைச் சம்பளத்தில் எவ்வித அதிகரிப்பும் இன்றி மேலதிகக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது எவ்வித பயனும் அற்றது. அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்போம். அவ்வாறில்லை எனில் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு சம்பளப் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா. 1,750 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகக் கோரியபோது, ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் 2,138 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகக் கோரின.
“அதற்கமைய ஜே.வி.பி. தொழிற்சங்கம் இன்றும் 2,138 ரூபாவை அடிப்படைச் சம்பளம் என்ற நிலைப்பாட்டில் உள்ளதா? அவ்வாறில்லை எனில் 1,700 ரூபாய் நியாயமான சம்பளம் எனக் கூறுகின்றீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் கூலி சம்பள முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இதனை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும்,” என்றும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
அத்துடன், முந்தைய ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்போதைய அரசாங்கம் நினைத்தால் ரத்து செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.





