இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்துக்கு முன்பணத்தை இந்தியா கோருவதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து கடன் வசதி அடிப்படையில், எரிபொருளை இலங்கை பெற்று வந்தது.
குறித்த கடன் வசதிகள் தீர்ந்து போனதையடுத்து, இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.
இதனால் இலங்கையில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலதிகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு இந்தியா, முன்பணத்தை செலுத்துமாறு கோரியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தினால், முன்பணம் செலுத்தப்படாமல் இருப்பதால், சில எரிபொருள் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக, தங்களை அடையாளம் காட்ட மறுத்த இரண்டு இந்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.





