இஷாரா செவ்வந்தி நாடுகடத்தலுக்கு ரூ. 1.5 கோடி செலவு – புலனாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டுத் தப்பியோடச் செய்வதற்கு கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகப் புலனாய்வு விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி தற்போது நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ, தனது தந்தையைக் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் நோக்குடன் பாரிய திட்டத்தை வகுத்த கெஹல் பத்ர பத்மே என்பவரே இந்தப் பணத்தைச் செலவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா, அங்கிருந்து நேபாளம் என இஷாரா செவ்வந்தியைத் தப்பியோடச் செய்த ஜே.கே.பாய் என்ற நபருக்கு இந்தக் கோடி கணக்கிலான பணத்தைக் கெஹல் பத்ர பத்மே வழங்கியுள்ளார்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய இஷாரா செவ்வந்தியைப் பாதுகாப்பதற்காகவே, கெஹல் பத்ர இந்தளவு பெரிய தொகையைச் செலவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் தொடர்புடைய மற்றவர்கள் மற்றும் இஷாராவைச் பாதுகாப்பாக நாடுகடத்த உதவிய தமிழரான ஜே.கே.பாய்க்கும் கெஹல் பத்ர அதிகளவிலான பணம் செலுத்தியுள்ளதை அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.





