யாழ். வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பு! வாள்வெட்டுச் சந்தேக நபர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்யும் நோக்கில், இன்று (ஒக்டோபர் 18) அதிகாலை இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். எனினும், குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்றதால், பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாளிகைத்திடல் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், பலர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்கள் நடத்திப் படுகாயப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காகப் பல தடவைகள் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பிணையில் வந்திருந்த அவர், பல வீடுகளைத் தாக்கியும், பொருட்களைச் சேதப்படுத்தியும், பலரை அச்சுறுத்தியும் வந்துள்ளார். அத்துடன், சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்த ஒருவரைச் சரமாரியாக வாளால் வெட்டிக் காயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மருதங்கேணி காவல்துறையினர் குறித்த சந்தேக நபரைத் தனியாகக் கைது செய்ய முயற்சித்தும் அது கைகூடாததால், இன்று அதிகாலை இராணுவத்தினருடன் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். எனினும், இராணுவம் மற்றும் காவல்துறையினர் சுற்றிவளைப்புச் செய்ய வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட குறித்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக மருதங்கேணி காவல் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு குடும்பங்கள் இடம்பெயர்வு!
இதேவேளை, குறித்த சந்தேக நபர் வாளுடன் தொடர்ச்சியாக உலாவி வருவதாகவும், இதனால் பாடசாலைக்கும், கல்வி நிலையங்களுக்கும் மாணவர்கள் செல்வதற்கு அச்சப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், குறித்த சந்தேகநபருக்குப் பயந்து ஆறு குடும்பங்கள் வரையில் மாளிகைத்திடல் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு வாள்வெட்டுச் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் குறுகிய காலத்தில் பிணை வழங்குவதே, குறித்த நபர் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதற்குக் காரணம் என்றும் பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





