ராஜஸ்தானில் சொகுசு பஸ் தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், சொகுசுப் பஸ் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) மதியம் 57 பயணிகளுடன் ஒரு சொகுசுப் பஸ் சென்றுகொண்டிருந்தது.

ஜோத்பூர் – ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இந்தப் பஸ் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிவாரணம்

இந்தத் துயரச் சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஜோத்பூரில் நடைபெற்ற பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என அவர் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.






