மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு
மின்சார கட்டணத்தை மாற்றாமல் தற்போதைய நிலையை பேணுவதை, கடன் நிலுவை மற்றும் அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களில் எதிர்பார்க்கப்படும் செலவுகளை கருத்தில் கொண்டு மின்சார சபை பரிந்துரைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மின்சக்தித்துறை மறுசீரமைப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான புபுது நிரோஷன் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 268 பில்லியன் ரூபாய் செலவுகளை ஏற்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெற்ற இலாபத்தில் 112 பில்லியன் ரூபாய் கடன் மற்றும் செலவுகளைத் திருப்பி செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வருடம் இறுதியில் 41 பில்லியன் ரூபாய் மீதமாக இருப்பதாகவும் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களில் மேலதிக செலவுக்கான 39 பில்லியன் ரூபாயை 41 பில்லியன் ரூபாயிலிருந்து பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மின்சார சபை, அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் கட்டணத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாது, இதை முறையாக கையாளும் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.