தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அன்னைபூபதி நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் வடிவேல் தகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னைநாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 25ம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. குறித்த சட்டமானது ஆபத்தானது. இவ்வாறான நினைவேந்தல் கூட்டங்களை கூடவும் முடியாத அளவிற்கு குறுித்த சட்டம் அமையவுள்ளது.
ஊடகங்கள் தமது கருத்துக்களை சுயாதீனமாக வெளியிட முடியாது. சமூக வலைத்தளங்களில் நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இவ்வாறான மிக மோசமான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
ரணிலை நாங்கள் சாதாரணமாக எடை போட முடியாது. அவர் எங்களை பல்வேறு சிக்கல்களிற்குள் சிக்க வைப்பார். இவ்வாறான நிலையில் எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குறித்த சட்டத்திற்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் சில சட்டங்களை இயற்றும்போது ஆதரவளித்தது போன்று செயற்படாமல், இந்த சட்டத்திற்கு எதிராக ஒன்றாகி எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.