இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதை: இந்தியா – இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கிடையே ஒரு புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், மும்பையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தின் போது இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோருக்கு இடையே இது தொடர்பில் இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.
புதிய கப்பல் பாதையைத் தொடங்குவதன் மூலம் இந்தியா – இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் அமைச்சர் அனுர கருணாதிலக, இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்பதற்காக ஒக்டோபர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





